பத்தாம் திருமுறை 1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
 

                                                                விநாயகர் வணக்கம்  

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.

                                                     முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவ பெருமானே.

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.  

சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை; அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது. அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.

பொன்போலும் மேனியையுடைய, யானைத் தோற் போர்வையாளனாகிய சிவபெருமானே! ஊழிகளுள் ஒன்றில் ஒருவர் மற்றிருவரையும், பிறிதொன்றில் மற்றொருவர் ஏனை இருவரையும் படைக்குமாற்றால் தம்முள், `முன்னோர், பின்னோர்` என்னும் வேறுபாடில்லாத மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்; அத்தன்மை பிறருக்கு இன்மையால், தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்; தன்னை, ``அப்பா`` என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் இருக்கின்றான்; (உம்மையால்) ``அம்மே`` என்று அழைப்பவர்க்கு அம்மையாயும் இருக்கின்றான்.

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

நீண்ட சடையை உடையவனாகிய சிவபெருமான், தேறுங்கால் நெருப்பினும் வெம்மை உடையன்; அருளுங்கால் நீரினும் தண்மையுடையவன்; ஆயினும், அத்தகைய அவனது ஆற்றலின் தன்மையை அறியும் உலகர் இல்லை. உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையனாவான்.

பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

என்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெரு மான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். ``நந்தி`` என்னும் பெயர் உடையான். அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

எங்கள் சிவபெருமானது பெருமையை நோக்குமிடத்து அவனோடொத்த பெருங்கடவுள் சேய்மையிலும் இல்லை; அண்மையிலும் இல்லை என்பது புலப்படும். உழவும், உழவின் பயனும், அவற்றிற்கு முதலாயுள்ள மழையும், அம் மழையைத் தருகின்ற மேகமும் ஆகிய எல்லாம், `நந்தி` என்னும் பெயருடைய அவனேயன்றிப் பிறர் இல்லை.

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

சிவபெருமான் என்றும் ஒரு பெற்றியனாய் அழிவின்றி இருக்கவும், அளவற்ற தேவர்கள் அழிந்தனர் என்று புராணங்கள் முழங்கவும், மண்ணிலும், விண்ணிலும் உள்ள பலர் அப்பெருமானை, `இவனே முதல்வன்` எனத் துணியமாட்டாத வராகின்றனர்.

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

திருமால், பிரமன் முதலிய தேவர்களும் இன்னும் சிவபிரானது பெருமையை ஓர்ந்து தெளியவில்லை. ஆகவே, அண்டத்தின் அப்புறத்தும் உள்ள அவனது பரப்பை அளந்து கண்டவர் யார்? ஒருவரும் இல்லை. அவன் எவ்விடத்தையும் உள்அடக்கி அவை அனைத்தையும் கடந்து நிற்கின்றான்.

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே. 

சிவபெருமானது பெருநிலை (வியாபகம்) ஒருவராலும் அளத்தற்கரிது` என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணமாட்டாது அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

பிரமனும், திருமாலும் ஓரோர் எல்லையளவில் பெருநிலை (வியாபகம்) உடையவராயினும், அனைவரினும் மேம்பட்ட பெருநிலையுடையவன் சிவபெருமான். அவன் அத்தகையனாய்ப் புறத்து நிற்பினும், எப்பொருளிலும் நிறைந்து அவற்றை அறிந்து நிற்கின்றான்.

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

அருளாகிய ஒளி உருவினனாயும், என்றும் குறைதல் இல்லாத அவ்வருள் காரணமாக அனைத்துயிர்க்கும் நடுவுநிலைமையனாயும், அழிவில்லாதவனாயும் உள்ள சிவ பெருமான், தானே உலகிற்கு முதலாகியும், முடிவாகியும், பல்வகை உடம்பிலும் காணப்படுகின்ற இன்ப துன்பங்களாகியும் பரந்து நிறைந்திருக்கின்றான்.

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரருந் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே

திருத்தி விளங்கிய, கொன்றை மாலையணிந்த குழல்போலும் சடையை உடைய, அழகு விளங்கும் மங்கையைப் பாதியில் உடைய சிவபெருமானை மும்மூர்த்திகளும், தேவர்களும் எதனை விரும்பிக் குற்றத்தையே குணமாகக் கொண்டாடி வணங்கு கின்றார்கள்?

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.

``காயம், கத்தூரி`` என்னும் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் அவ்விடத்து வியப்புண்டாகுமாறு கத்தூரியின் மணம் காயத்தின் மணத்தை அடக்கி மேற்பட்டு விளங்கும்; அதுபோல, உலகத்தார் சிவபெருமானை ஏனைத் தேவர் பலரோடு ஒப்ப வைத்து எண்ணினாலும், சிவபெருமானது திருவருளுக்கு ஏனைத் தேவரது அருள் ஈடாகாது; சிவனருளே மேம்பட்டு விளங்கும்.

அதிபதி செய்து அளகையர் வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி யாதரித் தாக்கம தாக்கின்
இதுபதி கொள்ளென்றான் எம்பெரு மானே.

அளகை நகரில் உள்ள இயக்கர்க்குத் தலைவனாகிய குபேரனை அவன் செய்த மிக்க தவத்தைக் கண்டு அவனை அந்நகருக்குத் தலைவனாகச் செய்து, அந்த அளகை நகரத்தைச் சுட்டி, `இதுதான் உனது நகர்; இதனை நீ நன்கு புரந்து, செல்வத்தைப் பெருக்குவதாயின் ஏற்றுக்கொள்` என்று எங்கள் சிவபிரானே வழங்கினான்.

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.

சந்திரனைத் தரித்துள்ளவனாகிய சிவபெருமான், இவ்வுலகத்தில் ஏலம் முதலியவற்றின் மணங் கமழ்கின்ற சோலையின் பெயராகிய `பொழில்` என்பதனையே தமக்கும் பெயராகக் கொண்ட ஏழு தீவுகளையும், இவ்வுலகிற்கு மேலே ஒன்றைவிட ஒன்று நூறு கோடி யோசனை விரிவுடையனவாகிய பல உலகங்களையும் தோற்று வித்தவன்; அவ் வளவையும் ஆக்கிக் காத்து அழிக்குமாற்றை அறிந்த பேரறிவுடையவன். அவன் தன்னை நோக்கிச் செய்யும் மெய்த்தவத்தைக் கண்டு அத்தவத்தையே தனக்கு இடமாக விரும்பி வீற்றிருக்கின்றான்.

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே.

உயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் பண்டே அமைத்து வைத்த தலைவன் நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராயின், அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.

மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.

கண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற கள்வனாகிய சிவன், யாவர் எதனை எண்ணினும் அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுகின்றார்களில்லை. நினையாமலே ஒவ்வொருவரும் `சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை` என்று நொந்து கொள்கின்றார்கள். உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.

வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.

உலகீர், எல்லாம் வல்லவனாய், கடல் நீரை, `தீக்கடவுளாகிய வடவையிடத்து அடங்கிநிற்க` என மிகுந்து வாராமல் நிற்கச்செய்த அருளாணை உடையவனாகிய சிவபெருமானை, நுண்ணுணர்வின்றி, `இல்லை` எனக் கூறிப்பிணங்குதல் வேண்டா; அவன் அயன், மால் முதலிய கடவுளர்க்கு முதல்வனாய் நின்று, எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்துவருகின்றான்.

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி
தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்ல
மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.

`நமது மனமே நம்மை நன்னெறியினின்று மாற்றி விட்டது` என்பதை உணர்ந்து, மயக்கம் பொருந்திய அம்மனத்தை மாற்றித் தெளிந்தவரது வழியிற்றான் சிவபெருமான் மறைவின்றி விளங்கி நிற்கின்றான். அதனால், உலகீர், அவனது திருவடி நிழலில் செல்வதற்குப் பன்முறை வணக்கம் கூறியும், பலவாற்றால் புகழ்ந்து பாடியும் அவனது திருவடிகளை என்றும் தெளிந்து நின்மின்கள்.

காணநில் லாயடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணிய னாகி அமர்ந்து நின் றானே.

`இறைவனே! நீ முன்முன் தோன்றினால் உன்னைத் தழுவிக்கொள்ளுதற்கு நான் சிறிதும் நாணமாட்டேன்; எனக்கு உன்னையன்றி உறவாவார் யாருளர்! யான் காணும்படி வெளி நின்றருள்` என்று மாறுபாடின்றி இரக்கின்ற பண்புடைய அடியவர் உள்ளத்திலே சிவன் அறையப்பட்ட ஆணிபோல்பவனாய் வீற்றிருக்கின்றான்.
 
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
 

சிவபெருமான் பிறப்பில்லாதவன்; சடை முடி உடையவன்; மிக்க அருளுடையவன்; ஒருகாலத்தும் அழிவில்லாத வன்; யாவர்க்கும் வேறுபாடின்றி நன்மையையே செய்து, அவரை என்றும் விட்டு நீங்காதவன். அதனால் அவனை வணங்குங்கள். வணங்கினால் என்றும் மறவாத தன்மையாகிய மெய்யுணர்வு தோன்றுவதாகும்.

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.

யாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.

சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்
தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.

`அந்தி வானம் என்று சொல்லத் தக்க நிறத்தை யுடைய தாமரை (செந்தாமரை) மலர்போலும் ஒளி பொருந்திய முகத்தை உடைய, அழிவில்லாத சிவபெருமானது திருவருள் நமக்கே உரியதாகும்` என்ற உறுதியுடன் அவனை நாள்தோறும் வணங்க உடன்படும் அவரது உள்ளத்துள்ளே அவன் குடிபுகுந்து நிற்கின்றான்.

இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.

மாயோனும் சிவபெருமானை வழிபட உடன்பட்டு நின்றதல்லது வழிபட்டுக் காணவில்லை. படைப்புக் கடவுளாகிய பிரமன் வழிபடுதற்கு உடன்படவேயில்லை. அவர்கட்குப் பின் இந்திரன் காண இயலாதவனாய் வாட்டமுற்று நின்றான். ஆகவே, சிவபெருமான் தன்னை வணங்கி நிற்பவர்க்கே செல்கதித் துணையாய் நிற்கின்றான்.

வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎங்
கோனைப் புகழுமின் கூடலு மாமே.

மேகம் போலும் நிறத்தையுடைய திருமால், பிரமன், மற்றைய தேவர் ஆகியோர்க்கும் இழிவான பிறவித் துன்பத்தை நீக்குகின்ற ஒப்பற்றவனும், யானையை உரித்த எங்கள் தலைவனும் ஆகிய சிவபெருமானைத் துதியுங்கள்; அதனால் அவனை அடைதலாகிய அப் பெரும்பேறும் கிடைக்கும்.

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே.

`வானத்தில் நின்று முழங்குகின்ற மேகம்போல இறைவன் மேலுலகத்தில் நின்று தன் அடியவரை `வருக` என்று அழைப்பான் என்று ஆன்றோர் கூறுதல் உண்மையாய் இருக்குமோ` என்று சிலர் ஐயுறுவர். `எங்கள் சிவபெருமான் தன்னைப் பிரிந்த கன்றைத் தாய்ப்பசு கதறி அழைப்பது போலத் தன் அடியவரைத் தன்பால் கூவி அழைப்பவனே; (இதில் ஐயமில்லை. அவனைப் பலர் துதித்து அவற்றிற்கு ஈடாகப் பல பயன்களைப் பெற்றனர். ஆயினும்,) நான் அவனைத் துதிப்பது ஞானத்தைப் பெறுதற்பொருட்டே.

மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

மக்கள்முன் தோன்றி அருள்புரிதலால் மண்ணுலகத்தில் உள்ளவனைப் போலவும், தேவர்களுள் ஒருவனாய் நிற்றலால் வானுலகத்தில் உள்ளவனைப் போலவும், முத்தர்களுக்கு வீட்டுலகத்தில் நின்று அருள்புரிதலால் வீட்டுலகத்தில் உள்ளவன் போலவும், யாவரையும் தன்மயமாகச் செய்தலால் இரத குளிகை போல்பவன் போலவும் தோன்றுபவனாய், பண்களில் பொருந்திய இசையிடத்துள்ள விருப்பத்தால் தானே வீணையை இசைக்கின்ற சிவபிரான் பொருட்டு அவனது அருள் நோக்கில் நின்றே அவனிடத்து நான் அன்புசெய்கின்றேன்.

தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருள் பாடலு மாமே.

சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன்; நமக்கும் தலைவன்; உலகமுழுதும் நிறைந்து நிற்கும் நிறைவினன்; அவ்வாறு நிற்பினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியோன்; ஆதலின் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவர் ஒருவரும் இல்லை. ஆயினும் எங்கும் நிறைந்த அவனது அருட்டன்மைகளை உயிர்கள் தாம் தாம் அறிந்தவாற்றால் பாடித் துதித்தலும் அமைவுடையதே.

பதிபல வாயது பண்டிவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

பண்டுதொட்டு இவ்வுலகத்தில் `கடவுள்` என்ற ஒன்று, பலவாகக் கொள்ளப்படுகின்றது. அவற்றின்கண் பலரும் பல விதிமுறை வழிபாடுகளைச் செய்தும் மெய்ம்மையைச் சிறிதும் உணர்கின்றார்களில்லை. அக்கடவுளரைத் துதிக்கின்ற பல தோத்திரப் பாடல்களைத் தாங்களே ஆக்க வல்லவர்களும் மெய்யறிவில்லாதவர் களாய் மனத்தில் துன்புறுகின்றார்கள்.

சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

சந்தனத்தில் நின்று கமழ்கின்ற கத்தூரி மானின் மதமணம்போலச் சிவபெருமான், முத்தியுலகத்தில் உள்ள சிலர்க்கு அறிவுறுத்திய நெறியே மெய்ந்நெறி. அந்நெறி நின்றே பகலவனது பல கதிர்கள் போன்ற அவனது பல திருப்பெயர்களை, நான் நடக்கும் பொழுதும், இருக்கும்பொழுதும் துதித்துக் கிடக்கின்றேன்.

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்
ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.

பிறிதொரு நெறியும் ஒப்பாக மாட்டாதபடி உயர்ந்து நிற்பதாய சிவநெறியாற் பெறப்படுபவனாகிய சிவபெருமானுக்கு வணக்கம் கூறுங்கள்; கூறிப் பலவாற்றால் புகழுங்கள்; புகழ்ந்தால், மேலுலகத்தையும் கீழுலகமாகிய நிலவுலகம் முழுதையும் உமக்கு அவன் வழங்குவான்; அவ்வுலகங்களை நீங்கள் உங்கள் விருப்பப்படிஆளலாம்.

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.

எவ்வுயிர்க்கும் தந்தையும், `நந்தி` என்னும் பெயருடையவனும், தெவிட்டாத அமுதமாய் இனிப்பவனும், வள்ளல் பிறர் ஒருவரும் ஒப்பாகமாட்டாத பெருவள்ளலும், ஊழிகள் பல வற்றிலும் உலகிற்குத் தலைவனாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை யாதொரு முறைமையிலானும் துதியுங்கள்; துதித்தால், அம்முறைக்குத் தக அவனது அருளைப் பெறலாம்.

நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. 

சிவபெருமானை நானும் நாள்தோறும் மேற் கொண்டு நின்று துதிக்கின்றேன்; அவனும் நாள்தோறும் வானத்தில் பொருந்தி வளராநின்ற வளர்பிறைச் சந்திரன் போல எனது உடலில் மகிழ்ந்து மேன்மேல் விளங்கி நிற்கின்றான். தூயனாகிய அவன் எனது புலால் உடம்பில் நின்று உயிர்ப்பாய் வெளிப்படுகின்றவாறு வியப்பு.

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.

யாவரினும் பெரியவனும், யாவர்க்கும் அரியவனும், நால்வகைத் தோற்றத்துள் ஒன்றாகாது தன் இச்சையாற் கொள்ளப் படுவனவாய அருட்டிருமேனிகளை உடையவனும் ஆகிய எங்கள் சிவபெருமானைப் பிதற்றுதல் ஒருகாலும் ஒழியேன்; அதனால், நானே பெருமையை உடைய தவத்தை உடையவன்.

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே.

தன்னை வாழ்த்த வல்லவரது மனத்தின் கண் ஒளியாயும், தூய்மையாயும், இன்பமாயும் விளங்குகின்ற சிவபெரு மானைத் துதித்தும், `எம் தலைவன்` என்று வணங்கியும் உறவு கொண்டால், அவனது திருவருளைப் பெறலாம்.

குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே.

கரவு கொண்டு வன்மை செய்யாது தன்னை வாழ்த்த வல்லவர்க்குச் சிவபெருமான் அவர்களது உள்ளத்தைப் புறக் கணியாது புகுந்து நிற்பான்; அதனால் அவனது மாற்று நிறைந்து அடையப்பட்ட செம்பொன்னிடத்துப் பொருந்திய ஒளியை ஒத்த, ஒலிக் கின்ற கழல் அணிந்த திருவடியைக் குறைவேண்டி அடைந்து பற்றுங்கள்.

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவரைக் காத்த சிவபெருமானை, காடு வெட்டித் திருத்திய புனம்போன்ற உள்ளத்தில் வைத்துத் துதிக்க வல்லவர்கட்கு, உமையை ஒரு பாகத்தில் உடைய அவன் அவ்வுள்ளத்திலேயே மான் இனத் தோடு ஒப்பச் செய்யப்பட்ட பார்வை விலங்கு போல்பவனாய் அச்சந் தோன்றாது அன்பு தோன்றத்தக்க வடிவத்துடன் பொருந்தி நிற்பான்.

போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே.

சிவபெருமானை அடைந்து துதிப்பவர்கள் பெறத் தக்க பயன், அவன் `நான்` என்னும் பசுபோதத்தை ஒழித்துத் தரும் சிவபோதமேயாம். அதனை அவன் தானே விரும்பிக் கொடுப்பான். அதுவன்றி, நிலையில்லாத அப்பசு போதத்தால் சில வற்றை விரும்பி அடையினும் அவற்றையும் அவன் உடன்பட்டுக் கொடுப்பான்.

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே.

சிவபெருமானது திருவடியையே துதித்து, அலறி, அழுது, அவற்றையே விரும்பி நாள்தோறும் நினைக்க வல்லவர்க்கு, அவன் தனது திருவடியை உறுதுணையாகக் கொடுத்து, பின் அதிலே அடங்கிநிற்க வல்லார்க்கு அதனை இனிது விளங்கத் தந்து, அவரது அறிவில் நிறைந்து நிற்கின்றான்.

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

தேவர், அசுரர், மக்கள் ஆகிய அனைவரும் சிவ பெருமானது திருவடிக்கு வணக்கம் கூறித் துதிப்பர். அதனால் நானும் அவ்வாறே செய்து அதனை என் அன்பினுள் நின்று ஒளிரச் செய்தேன்.

விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே.

கடல் சூழ்ந்த இவ்வுலகம் வினைவழியல்லது நடத்தல் இல்லை. இங்கு இன்பச்சூழலும் வினைவழித் தோன்றுத லல்லது வேறோராற்றான் இல்லை. ஆயினும் ஒளிமயமாகிய சிவபெருமான் தன்னை நாள்தோறும் துதிப்பவர்க்கு அத்துதி வழியாக முத்திக்கு வழிகாட்டும் பகலவனாய் நிற்பான்.

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.

`அந்தி வானம்போலும் நிறம் உடையவனே, அரனே, சிவனே` என்று சிவபெருமானது திருப்பெயர்கள் பலவற்றைச் சொல்லி, தியானத்திற்கு உரிய அவனது வடிவத்தைச் செம்மை பெற்ற அடியார்கள் வணங்கும்பொழுது நானும், `எவ்வுருவிற்கும் முதலாய திருவுருவத்தை உடையவனே, தலைவனே, மேலானவனே` என்று துதித்து வணங்கினேன்; அப்பொழுதே ஞானமயனாகிய அவன் இவ்வாறு என் உள்ளத்திற் புகுந்துவிட்டான்.

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே.

சிவபெருமானை ஒரோவொரு பொழுதாயினும் நினைப்பின், இல்லறத்தில் நிற்பவரும் பெரிய தவத்தவரேயாவர். துறவராயினார் சிவத்தியானத்திலே நிற்பாராயின், ஞானத்தில் நிற்பவராவர். இல்லறத்தவராயினும் துறவறத் தவராயினும், பனை மரத்தின் மேலே வாழ்ந்தும் அப்பனையின் பயனை அறிந்து நுகர மாட்டாத பருந்துபோலச் சிவனது திருவருளில் நின்றும் அதனை யறிந்து அழுந்தமாட்டாதவர்க்குப் பேரின்பம் உண்டாதல் இல்லை.

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

மெய்யுணர்ந்தோரால் துதிக்கப்படு கின்றவனும், தேவர்கட்குத் தலைவனும், எப்பொருட்கும் முதல்வனும், இவ்வுலகத் திற்றானே நிரம்ப அருளைப் புரிபவனும், மேலானவற்றிற்கெல்லாம் மேலானவனும், எமக்குத் தந்தையாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை நான் அணையா விளக்காகக் கொண்டு தலையால் வணங்கி, மனத்தால் நினைந்து அன்பு செய்து நிற்கின்றேன்.

பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசங் கடந்தெய்த லாமே.

தன்னின் வேறாகாத பரையாகிய சத்திக்கும், தன்னின் வேறாகிய பசு பாசங்கட்கும் தலைவனாகிய சிவபெருமானை நினைந்து, உயிர்க்குரிய உடலிடத்தே சொல்லும் அந்நெறிப்பட்டு நிற்க வல்லவர்கட்கு, கட்டுற்ற உயிர்கட்கு உரித்தாகிய அலைமோதும் பிறவிப் பெருங்கடலை நீந்தி, மும்மலங்களும் கழன்று, பரமுத்தி யாகிய கரையை அடைதல் கூடும்.

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.

சிவபெருமானையே என் தலைவன் என்று நினைந்து அவனது திருவடியாகிய மலர்களை நான் தலையில் சூடிக்கொள்வேன்; நெஞ்சில் இருத்திக்கொள்வேன்; பாடித் துதிப்பேன்; பலவாகிய மலர்களைத் தூவிப் பணிந்துநின்று கூத்தாடு வேன்; தேவர்க்குத் தேவன் என்று கொள்வேன்; திருவருள் பெற்ற இந்நிலையில் நான் அறிவது இவ்வளவே.

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற் காமே.

என்றும் ஒழியாது செய்கின்ற படைப்பும், காப்பும், அழிப்பும், அருளும் என்ற நான்கனையும் ஆராயுமிடத்தும் அவை அனைத்தையும் சோர்வின்றிச் செய்பவன் சிவபெருமான் ஒருவனே. ஆயினும், மெய்யுணர்ந்தோராகிய அவன்றன் அடியார்கள் சொல் கின்ற அளவில்லாத அவன் பெருமைகள் `மால், அயன்` என்னும் இருவர்க்கும் ஏற்ற பெற்றி பொருந்துவனவாம்.

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.

யாவர்க்கும் முதல்வனாகிய சிவனும், அழகிய மணிவண்ணனாகிய மாயோனும், முதற்றொழிலாகிய படைப்பினைச் செய்யும் பிரமனும் என்கின்ற வடிவங்களை ஆராயின், அம்மூன்று வடிவங்களும் தொழில் இயைபில் ஒன்றே என்று அறியாமல்,`வேறு வேறு` என்று சொல்லி உலகத்தார் இகலி நிற்கின்றார்கள்; இஃதோர் அறியாமை இருந்தவாறு!

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

வினையின் நீங்கி நிற்பவன் சிவபெருமான் ஒருவனே. அதற்கு உலகில் திருக்கோயில்களில், காணாத அரு வினுக்கும் காண்கின்ற உருவினுக்கும் (தி.8 பெரியபுராணம். சாக்கிய.8) முதலாயுள்ள அவனது இலிங்கத் திருமேனி நடுவிடத்தில் விளங்க, ஏனைத் தேவர் பலரும் அதனைச் சூழ்ந்து போற்றி நிற்றலும், அத்தேவர் நடுவிடத்தில் விளங்கும் கோட்டங்களில் அஃது அவ்வாறு நில்லாமையுமே சான்றாகும். காட்சியானே உணரப்படுகின்ற இதனையும் நோக்காது, முதற்கடவுள் `அது` என்றும் `இது` என்றும் பிற தெய்வங்களைச் சுட்டிச் சொல்லித் தம்முட் சிலர் கலாய்ப்பாராயின், அவர் பகுத்துணர்வில்லாதவரே யாவர். தூர்ப்புக்களையே பொருளென்று கண்டவர்கள் அத்தூர்ப்பைத் தான் அறிவார்கள்; அவற்றை அகற்றி உள்ளே உள்ள பொருளை அவர்கள் எவ்வாறு கண்டறிவார்கள்!

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

`சிவன், சதாசிவன், மகேசுரன்` என மூன்றாகவும், `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என ஐந்தாகவும், தொகுத்தும் வகுத்தும் சொல்லப்படுகின்றனர். நிலைகளே, `சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், மால், அயன்` என ஒன்பதாக விரித்துச் சொல்லப்படும். அந்நிலைகள் எல்லாம், முதல்களாகிய விந்து நாதங்களினின்றே தோன்றுதலால், யாவும் அத்தொகுதித் தலைவனாகிய சிவபெருமான் ஒருவனது நிலை வேறுபாடுகளேயன்றி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளன்று.

பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.

மேற்கூறிய நிலைகளால் உயிர்கட்கு விளையும் பயன்களை அறிந்து அவற்றை முறைப்படுத்தி எண்ணுங் கால் சீகண்ட வுருத்திரர்க்குக்கீழ் நிற்கும் `அயன், மால்` என்பவர் தாமும் நமக்கு அயலாவாரல்லர்; அதனால் நீவிர் அக்கடவுளராலும் சிவனுக்கு அடியவராகும் வகையைப் பெற முயல்வீராக.

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.

எண்ணில்லாத தேவர்கள் திருவோலக்கத்தில் சூழ்ந்து பணிகின்ற சிவபிரானது திருமேனியை அடியேனும் பணிந்து கும்பிட, அவன், `நீ திருமாலையும், படைப்புக் கடவுளாகிய பிரமனையும் நிகர்த்தவன்; ஆதலின், நிலவுலகத்திற்கு நமது திருவருட் பெருமையை உணர்த்து` என ஆணை தந்தருளினான்.

வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

உடம்போடு கூடி நிற்பவருள் சிலரை`இவர் தேவர்` என்றும், சிலரை, (இவர் மக்கள்) என்றும் உணர நிற்கும் நிலைமைகள் எல்லாம் சிவபெருமானது செயலால் அமைவனவன்றித் தானாகவே அவ்வாறு நிற்கும் தனித் தெய்வம் இல்லை.

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

சிவதன்ம நூலுள், `உருத்திரன், மால் அயன்` என்னும் மூவரும், மெய்யுணர்ந்தோர் ஆய்ந்துணர்ந்த பேரொளி யாகிய அநாதிப் பொருள் ஒன்றே மூன்றாயும், ஐவந்தாயும் நின்ற முதனிலைகளில் அமைவனவாதலை அந்நூலை அறியாதார் அறிய மாட்டார். அதனால், அவர் உலகியல் நூலே பற்றி அவரை வேறு வேறு கடவுளாக்கி அவருள் ஒருவராகப் புகழ்ந்தும், ஏனையிருவரையும் இகழ்ந்தும் திரிகின்றனர்.

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

சிவபெருமான் ஒன்றோடும் ஒட்டாது தனித்து நிற்கும் மேல் நிலையில் ஒருவனேயாய், அந்நிலையினின்று வரு தலாகிய பொதுநிலையில் எல்லாப் பொருட்கும் உள்ளும், புறம்பும் நிறைந்து நிற்பவனாய் மால், அயன் முதலிய ஒன்பது நிலைகளை உடையவனாகியும், உயிர்களின் தகுதி வேறுபாட்டிற்கேற் மற்றும் பல் வேறு நிலைகளையுடையனாகியும் இவ்வாறெல்லாம் தனது திருவருள் ஒன்றிலே நின்று உயிர்கட்குப் பாசத்தைப் போக்கி யருளுகின்றான்.

தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

எம் கடவுளாகிய சிவபெருமான் தானே ஒரு கூற்றில் சதாசிவ மூர்த்தியாய் `சாந்தியதீதை` என்னும் ஒரு கலையுள் நின்று அதனையே தன்னிடமாகக் கொண்டும் இருக்கின்றான். மற்றொரு கூற்றில் உயிர்க்குயிராய் நின்று உணர்த்துவதாகிய இலயசிவனாயும் நிற்கின்றான். பிறிதொரு கூற்றில் பாசங்களின் வழிநின்று நடத்தும் மறைப்பாற்றலாயும் உள்ளான். வேறொரு கூற்றில் பாசத்தை நீக்கித் தன்னைத் தரும் அருளாற்றலாயும் இருப்பன்.